திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வந்த இரண்டு பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த போது, தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் அரிய வகையான சிகப்பு காதினை கொண்ட 6850 ஆமை குஞ்சுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் இந்த ஆமை குஞ்சுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை அதிகாரிகள் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆமைக் குஞ்சுகளைப் பார்வையிட்டு இதனை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் முடிவில் மீண்டும் இந்த ஆமை குஞ்சுகள் மலேசியாவிற்கு அனுப்பப்படும் நிலை ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடம் இருந்து ரூபாய் 13.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.