இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
23 இந்திய மொழிகளைச் சேர்ந்த இளம் (35 வயதிற்குற்பட்ட) இலக்கியப் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. சிறார் இலக்கியப் படைப்பாளிகளுக்குப் பால சாகித்ய புரஸ்கார் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மொழிக்கும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விருது பெறுவோர்க்கு செப்புப் பட்டயமும் ரூ. 50,000 பணமுடிப்பும் அதற்குரிய விழாவில் வழங்கப்படும்.
இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது திருக்கார்த்தியல் சிறுகதை நூலுக்காக எழுத்தாலர் ராம் தங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல் 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது ஆதனின் பொம்மை நூலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நூல் கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளனர். இந்நூல் வழி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிய முடியும்.