சென்னையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்.
கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கப்படும் விவசாயக் கடன்களைப் பொறுத்தவரைச் சென்ற ஆண்டைவிட 2 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல உரங்கள் இருப்பு கடந்த ஆண்டைவிட 2 மடங்காக உள்ளது. குறிப்பாக உரங்களைப் பொருத்தவரை விவசாயிகளின் மொத்த தேவையில் 25 % மட்டுமே கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. அதனை 50% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அ.தி.மு.க ஆட்சியின் போது கூட்டுறவுத் துறைகளில் ரூ. 136 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்டு, நிச்சயம் முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் தனியார்த் துறைகளுக்கு இணையாக யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. எனவே கூட்டுறவு சங்கங்களின் வைப்பு நிதி ரூ.80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.