சென்னையில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து 40 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.
இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷ்க்கும், பா.ஜ.க நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 61 இடங்களில் நடந்த சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கிக் கணக்கிலிருந்த 96 கோடி ரூபாய் டெபாசிட், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்தார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி இவற்றின் நகலை அவர்களுக்கு வழங்குவார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணைக்குப் பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.