தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் Iconic Projects.. சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும்”: முதலமைச்சர் சொன்ன அட்வைஸ்!

சரியான திட்டமிடுதலுடனுன் திட்டங்களை அணுகினால், வரவிருக்கின்ற 4, 5 மாதங்கள் மாநிலத்தினுடைய பொற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட வலுவான காலங்களாக மாறும் என்பது உறுதி என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் Iconic Projects.. சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும்”: முதலமைச்சர் சொன்ன அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (16.06.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் முத்திரை திட்டங்கள் (Iconic Projects) குறித்த முதல் கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- "இன்று, முத்திரைத் திட்டங்களுடைய முன்னேற்றம் குறித்த முதல் கட்ட ஆய்வுக் கூட்டத்தினைத் நடத்தி முடித்திருக்கிறோம். பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படக்கூடிய சில சிக்கல்கள், ஆகியவற்றிற்கான தீர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம்.

“தமிழ்நாட்டின் Iconic Projects.. சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும்”: முதலமைச்சர் சொன்ன அட்வைஸ்!

இதுபோன்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தை, கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தி, மாநிலத்தினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அடையாளம் காணப்பட்ட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, அரசின் முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி, அந்த திட்டங்களை விரைந்து முடித்திட உங்கள் அனைவரையும் நான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது அத்திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும், முடிப்பதற்காக நீங்கள் நிர்ணயித்த இலக்குகளையும், நீங்கள் அனைவரும் நினைவில் நிறுத்தி அதன்படி பல திட்டங்களை முடித்து செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளதை நான் இந்தத் தருணத்தில் பாராட்டுகிறேன்.

தற்போது இரண்டாம் கட்டமாக, அந்தத் திட்டங்களோடு மட்டுமல்லாது, மேலும் பல புதிய திட்டங்களையும் இணைத்து, இன்றைய தினம் (16-6-2023) 11 துறைகளுடன் விரிவாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆய்வுக் கூட்டத்துடன் இந்த ஆய்வுக் கூட்டத்தினை ஒப்பிடும்போது பெரும்பாலான திட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது என்பதனை இந்த நீண்ட ஆய்வுக்குப் பிறகு நீங்களே தெளிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள்.

“தமிழ்நாட்டின் Iconic Projects.. சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும்”: முதலமைச்சர் சொன்ன அட்வைஸ்!

தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் திட்டங்கள், எதிர்பார்த்த காலக்கட்டத்திற்கு முன்பே செயலாக்கத்திற்கு வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக, நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மாநகரிலே விரைவில் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கக்கூடிய கலைஞர் நினைவு நூலகம் போன்ற திட்டங்கள் சிறப்பான உதாரணங்களாக அமைந்திருக்கிறது.

இதுபோன்று பல நல்ல திட்டங்கள் நமது அரசால் அறிவிக்கப்பட்டு, அவற்றின் செயலாக்கத்தினை உங்களுடன் நான் தொடர்ந்து பல ஆய்வுக் கூட்டங்களின் வாயிலாக விவாதித்ததன் விளைவாக, இன்று நமது மாநிலம் தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டதை போல நம்முடைய இலக்கு என்பது தேசிய அளவில் முதலிடத்தை பெறுவது மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் தலைசிறந்து விளங்கவும் இத்தகைய ஆய்வுக் கூட்டங்களை சிறப்பான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்.

ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அத்தகைய ஒருங்கிணைப்பினை உறுதி செய்ய இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் உங்களைப் போன்ற அரசின் உயர் அலுவலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பது விரைந்து முடிக்கப்பட்ட திட்டங்களின் மூலம் அறிய முடிகிறது. அதே சமயத்தில், இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் இன்னும் சில திட்டங்களின் முன்னேற்றம் தொய்வாக உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

“தமிழ்நாட்டின் Iconic Projects.. சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும்”: முதலமைச்சர் சொன்ன அட்வைஸ்!

இத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்படாவிட்டால் அவற்றின் முன்னேற்றம் மிக விரைவில் வரவிருக்கின்ற பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளினால் மிகவும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பருவமழை தாண்டிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் போன்ற சூழ்நிலைகளால் பணிகளின் முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலை உள்ளது.

எனவே, ஏற்கெனவே தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியபடி, உங்களுக்கு திட்டங்களை விரைந்து முடிக்க வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்களே வாய்ப்பான காலமாக உங்களுக்கு உள்ளது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை. ஆகவே, சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகினால், வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்கள் மாநிலத்தினுடைய பொற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட வலுவான காலங்களாக மாறும் என்பது உறுதி. கவனம் செலுத்தப்பட வேண்டிய திட்டங்களாக நாம் விவாதித்த திட்டங்களை முடிப்பதற்கு தேவைப்படும் நிதி உதவி மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைந்து பெற்று, சம்மந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உரிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், பணிகளை முடிவுற்று, தொடக்க விழா நடைபெறும் என நீங்கள் உறுதியளித்துள்ள நாட்களில், தவறாது இத்திட்டங்களை தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டுமென உங்களை நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இதே போன்ற ஆய்வுக் கூட்டத்தில் உங்களை நான் சந்திக்கின்ற பொழுது, விவாதித்த பெரும்பாலான திட்டங்களில், சிறப்பான முன்னேற்றம் காணப்படும் என்றும், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிடும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உங்களிடமிருந்து இந்த அளவில் நான் விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories