கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் தனது சொந்த ஊருக்கு செல்ல எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று மடிப்பாக்கத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் இருந்து ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் ஸ்டாப் வந்த பிறகும், அவினாஷ் இறங்கவில்லை என்பதால், ஆட்டோ ஓட்டுநர் அவரிடம் சத்தம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவினாஷிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதால் ஓட்டுநர் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓட்டுநர் அவருக்கு முதலுதவி செய்தும், அவரிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர், போலீசார் உதவியோடு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்து அவினாஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த அவர்கள் கதறி அழுதனர். மேலும் அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த, அவினாஷ் ஏற்கனவே அல்சர் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளதும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. எனினும் உடற்கூறாய்வு முடிவுக்கு பிறகே அவரது இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லாத நிலையில் ஊருக்கு செல்ல விரும்பிய இளைஞர் ஆட்டோவில் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றபோது உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.