முதிய பெற்றோர்களைப் பராமரிக்க முடியாமல் இவர்களை மகன்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் இந்த காலத்தில் உயிரிழந்த தாய்க்காக மகன் தாஜ்மஹால் கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுர்தீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். இவர் 11 வயது இருக்கும் போது தந்தை அப்துல்காதர் உயிரிழந்துள்ளார்.
இதனால் அவரது தாய் ஜெய்லானி பீவி தனது மகன் மற்றும் மகள்களை நன்றாகப் படிக்க வைத்துக் கரை சேர்த்துள்ளார். இதனால் தாயார் மீது அமுர்தீன் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்.
இதையடுத்து வயது முதிர்வின் காரணமாக ஜெய்லானி பீவி 2020ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். பின்னர் தனது தாயாருக்கு ஒரு நினைவில்லம் கட்ட அமுரீதின் முடிவெடுத்துள்ளார். அப்போது டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை போன்றே தனது தாயாருக்கு நினைவில்லம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து, இதற்காக ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்குக் கற்களை வரவைத்துள்ளார்.
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது. பிறகு முழு வேலைகள் முடிந்து ஜூன் 2ம் தேதி எளிமையான முறையில் நினைவில்லம் திறக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ரூ.5 கோடியில் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க அனைவராலும் முடியாத நிலையில் இந்த தாஜ்மஹால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர். இதைத் தென்னகத்தின் தாஜ்மஹால் என்று அழைக்கின்றனர்.