விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மேல்பாதி என்ற கிராமம். இங்கு திரெளபதி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. மிகவும் விசேஷமாக அறியப்படும் இந்த கோயிலுக்கு அக்கம்பக்கம் ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த சூழலில் இந்த கோயிலில் ஆதிதிராவிட, பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள சில சமூகப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இந்த கோயிலில் வழிபட வந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த கதிரவன் என்ற இளைஞரை, மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல் தாக்கியுள்ளது. இதனை தடுக்க வந்த கந்தன், கற்பகம் என்பவர்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து இந்த பிரச்னை ஊர் பிரச்னையாக மாறியது. மேலும் இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று தீக்குளிக்கவும் முயன்றனர். இதனால் இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த பிரச்னையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல நடவடிக்கைகள், பல கட்ட பேச்சு வார்த்தைகள் என தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தனர். இருப்பினும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இந்த நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145 (1) இன் கீழ் விழுப்புரம் கோட்டாட்சியர் முதல்நிலை உத்தரவைப் பிறப்பித்து இன்று காலை மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலின் வாயிலை பூட்டி சீல் வைத்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.