தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். 73 வயது முதியவரான இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 மற்றும் 8 வயதுடைய 2 சிறுமிகளை நோட்டமிட்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூட்டி சென்று சிறுமிகள் இருவருக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பாட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் இந்த சம்பவம் குறித்து முதியவர் மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் சாட்சிகள் விசாரணை முடிவுற்ற நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி குற்றம்சாட்டப்பட்ட முதியவர் ஐயப்பனுக்கு எதிராக வலுவான சாட்சிகள் உள்ளதால், அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குற்றவாளியான முதியவர் ஐயப்பனை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.