திருவண்ணாமலை மாவட்டம் சே.நாச்சியார் பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் - ரத்னா தம்பதி. இவர்களுக்கு ராஜலட்சுமி (5), தேஜா ஸ்ரீ (2) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ரத்னா சமீபத்தில் குழந்தை பெற்றதால், சென்னையில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் தனது மனைவியை மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வர எண்ணிய ராமஜெயம், சில நாட்களுக்கு முன்னர் சென்னை சென்றுள்ளார். அங்கே இருந்த தனது பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் சேர்த்து தனது உறவினர் ராஜேஷ் (29) என்பவரையும் காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது நேற்றைய முன்தினம் இரவு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் அந்த கார் காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு என்ற பகுதியில் வந்தபோது காரின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் நிலைத்தடுமாறிய ராமஜெயம், காரின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அந்த கார், அந்த பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சட்டென்று மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கிய அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழு காயமடைந்தவர்களை மீட்டனர். இதில் ரத்னா மற்றும் அவரது 2 பெண் குழந்தைகள், உறவினர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராமஜெயம் மற்றும் 3 மாத ஆண் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை பெற்றுக்கொண்ட மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும் வழியில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.