“தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை சாதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சரித்திரம் எழுதி, சாதனை படைத்து, சகாப்தமாக வாழும் கலைஞர் வகுத்து கொடுத்த பாதையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்கிறார்” என தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டி புகழாரம் சூட்டியுள்ளது.
இதுதொடர்பாக தினகரன் நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “உலக தமிழ் மக்களின் மனத்துடிப்பாக இருக்கும் ஒற்றை வார்த்தை கலைஞர். தமிழர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், குரல் கொடுத்தவர், எண்ணற்ற திட்டங்களை வகுத்து கொடுத்தவர் என்றால் அது முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தான்.
பராசக்தி படத்தில் தென்றலை தீண்டியதில்லை தீயை தாண்டியிருக்கிறேன் என்று எழுதியிருப்பார். அது அவர் வாழ்க்கைக்கும் அப்படியே பொருந்தும். படிப்படியாக தனது உறுதியான கொள்கையை முன்னெடுத்து பல்வேறு எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் கடந்து தமிழக முதல்வர் அரியணையில் அமர்ந்து தமிழ்நாட்டுக்கும் அப்பதவிக்கும் பெருமை சேர்த்தவர்.
தமிழ்நாட்டு முதல்வராக கலைஞர் இருந்த போது ஏழை, எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்தார். அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுத்தார். கல்வியில் வேறுபாடு கூடாது என்று சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார். பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி கொடுத்தார். தொழிலாளிகளின் வியர்வைக்கு மதிப்பளிக்கும் வகையில் மே 1 சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று அறிவித்தார்.
அருந்ததி இன மக்களுக்கு தனி இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி, பெற்றோரின் சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை, உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, உலக அளவில் தமிழின் மாண்பை உயர்த்தும் வகையில் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத்தந்தார்.
விவசாய முக்கியத்துவத்தை அறிந்தவர் என்பதால் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்து அவர்களது உயிரை காத்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அனைத்து சாதியினரும் ஒருமித்து வாழ சமத்துவபுரம் கண்டார்.
இப்படி தனது சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் அனைத்தையும் தமிழ், தமிழ் மக்கள் நலன் ஆகியவற்றுக்காகவே செலவழித்த ஒப்பற்ற தலைவர் கலைஞர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை தனது சுயவாழ்விலும், கட்சியிலும் கட்டிக்காத்து வாழ்ந்தவர் கலைஞர். இவரது அரசியல் மேடைப்பேச்சும், கவியரங்கத்தில் வாசி்த்த கவிதைகளும் இலக்கியங்களாக போற்றப்படுகின்றன. கலைஞரின் பேச்சு, எழுத்து ஆகியன அரசியலில் வளர்ச்சி பெற நினைக்கும் மாணவர்களுக்கு நிச்சயம் உரமாக அமையும்.
முத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழக அரசு வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை சாதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இப்படி சரித்திரம் எழுதி, சாதனை படைத்து, சகாப்தமாக வாழும் முன்னாள் முதல்வர் கலைஞர் வகுத்து கொடுத்த பாதையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்கிறார்.
வெளிநாடு சென்று தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளார். தமிழக இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.” எனத் தெரிவித்திருக்கிறது.