சேலம் மாவட்டம் கொங்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மனோகரன் - பூங்கோதை தம்பதி. இவர்களுக்கு வஷ்ரியா என்ற மகளும், தனீஷ் என்ற 7 வயது மகனும் உள்ளனர். இதில் தனீஷ், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற சிறுவன், அங்கே தனக்கு திடீரென பார்வை தெரியவில்லை என்று அழுதுள்ளார்.
இதனால் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சிறுவனை மருத்துவமனைக்கு கூட்டி சென்ற போது, அவருக்கு கண்ணாடி அணிய அறிவுறுத்தினர். ஆனால் கண்ணாடி அணிந்த பிறகும் சிறுவனுக்கு பார்வை தெரியவில்லை. இதனால் சிறுவனை நியூரோ மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுவனுக்கு Adrenoleukodystrophy (அட்ரினோலூகோடிஸ்ட்ரோபி) என்ற அரியவகை மரபணு சார்ந்த பிரிச்சினை இருப்பது தெரியவந்தது.
Adrenoleukodystrophy என்பது அரியவகை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் தலை முதல் கால் வரை என உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் நாளடைவில் செயலிழந்து போகும். இதற்கான சிகிச்சைக்கு லட்ச கணக்கில் பணம் தேவைப்படும். இருப்பினும் மனம்தளராத பெற்றோர், சிறுவனை பல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு முயற்சித்தனர்.
ஆனால் பெற்றோரிடம் போதிய அளவு பண வசதி இல்லாததால், மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் போயுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து குடும்பத்தாருடன் பேசினார். மேலும் சிறுவனுக்கு தேவையான உதவியை அரசு செய்யும் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சையை தொடங்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து வந்து சிறுவனைப் பரிசோதனை செய்து தேவையான உயர் சிகிச்சைகளை விரைந்து செய்யுமாறும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக்குழுவினரிடம் தெரிவித்தார்.
மேலும் சிறுவனுக்குத் தேவையான பிரத்யேக சிகிச்சை வெளிநாடுகளில் வழங்கவேண்டியதிருந்தால், அதற்கான ஏற்பாடுகளையும் முதல்வரிடம் கேட்டுச் செய்துகொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமைச்சரின் காரிலேயே சிறுவன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சிறுவனுக்கு சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.
முன்னதாக முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி டானியாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு பேரில், சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.