நாடு முழுவாதம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகள் நாள்தோறும் பதிவாகி வருகிறது. இதற்கு அந்தந்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுகள் புதிதாக உத்தரவு பிறப்பித்து குற்றங்களை அடக்கி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் பதிவான சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை காவல்துறை விரைந்து கைது செய்து வருகிறது. தமிழ்நாடு காவல்துறையின் துரித நடவடிக்கையால் குற்ற சம்பவங்கள் குறைந்து காணப்படுகிறது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) மற்றும் இந்தாண்டு (2023) முதல் மூன்று மாதங்கள் (ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) ஆகிய மாதங்களின் அறிக்கை படி, கொள்ளை மற்றும் செயின்/மொபைல் பறிப்பு குற்றங்களின் வழக்குகள் குறைந்து வருவதாக தெரிகிறது.
அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன; அதில் 188 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில், 88 கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன; அதில் 73 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.
குற்ற சம்பவங்கள் குறைய போலிசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனாலே ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. எனவே யாரேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், "2022 ஆம் ஆண்டில், குற்றவாளிகளுக்கு எதிராக 455 சிறப்பு இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 891 பேர் நன்னடத்தைக்காகவும், 22 பேர் விதிமீறல்களுக்காகவும் பிணைக்கப்பட்டுள்ளனர். 2023-ல், ஏப்ரல் 15 வரை, 148 சிறப்பு இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 350 பேர் நன்னடத்தைக்காகவும், 10 பேர் விதிமீறல்களுக்காகவும் பிணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பை மேம்படுத்த, நகரில் உள்ள 60,997 சிசிடிவி கேமராக்கள் ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளன. அதோடு பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் 1,750 இடங்களில் 5,250 கேமராக்களையும், மெகா சிட்டி திட்டத்தின் கீழ் 980 இடங்களில் 2,939 கேமராக்களையும் நிறுவ GCP திட்டமிட்டுள்ளது. மேலும் 1,750 முக்கிய பகுதிகளில் 5,250 சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொறுத்தப்படவுள்ளது. சிசிடிவி கண்காணிப்பு பொதுமக்களிடையே சிறந்த பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது" என்றார்.