சென்னை மாநகராட்சி சார்பில் அரசுப் பள்ளிகளுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அதேபோல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகள் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அப்பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு நடைமுறைபடுத்தி வருகிறது.
பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், திரு.வி.க நகர் மண்டலம், நம்மாழ்வார் பேட்டை சின்ன பாபு தெருவில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 35 பாழடைந்துள்ள பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு அப்பள்ளிகள் மறுசீரமைக்கப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஐந்து பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது. இதேபோல் பெருங்குடி மண்டலத்தில் மூன்று பள்ளிகள் உள்ளன. நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.