பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி பாப்பாத்தி. மாற்றுத்திறனாளியான இவர் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செல்வி பாப்பாத்தி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது "தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தான் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும், தனது குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு தனக்கு ஏதாவது வேலைவாய்ப்பு வழங்கிடுமாறு" கோரிக்கை வைத்தார்.
இவரின் கோரிக்கையைப் பரிவுடன் கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செல்வி பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்கள்.
கோரிக்கை வைத்த உடனே அதை நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குச் செல்வி பாப்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.