தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் மொபைல் போன் வைத்திருந்தாலும் கூட நம்மில் பலரும் டிவி பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிவி தான் எல்லாமே என்பது போல் இன்றும் உள்ளது.
தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டது என்பதால் வீட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஓய்வு இன்றி தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பர். சில நேரங்களில் டிவியை யாரும் பார்க்கவில்லை என்றாலும் கூட அது ஓடிக்கொண்டு தான் இருக்கும். அப்படி டிவிக்கு ஓய்வு கொடுக்காமல் ஓடுவதால், அது வெப்பம் ஏறி வெடிக்கும் நிலைக்கு வருவது உண்டு.
அந்த வகையில்தான் தற்போது அதிக நேரம் டிவி ஓடிக்கொண்டிருந்ததால், வெப்பம் அதிகமாகி டிவி வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரில் வசித்து வருபவர் தினேஷ். லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவருக்கு ஷாமினி என்ற மனைவி உள்ளார். பாலாஜி வேலைக்கு செல்லும்போதெல்லாம், வீட்டில் தனியாக இருக்கும் ஷாமினி வீட்டு வேலையுடன் சேர்ந்து டிவி பார்ப்பதும் வழக்கம்.
இந்த சூழலில் சம்பவத்தன்றும் வழக்கம்போல் கணவர் தினேஷ் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி ஷாமினி வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த டிவி திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் மிகவும் பயந்துபோன ஷாமினி அலறி கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பார்க்கையில் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அனைவரும் வீட்டுக்கு வெளியே சென்ற பிறகு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மீட்பு குழு வீட்டுக்குள் சூழ்ந்த புகையை வெளியேற்றி தீயை அணைத்தனர். டிவி அதிக நேரம் ஓடியதால் சூட்டின் காரணமாக பற்றி எரிந்திருக்கலாம் என்று கூறபடுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுவன் இதே போல் டிவி பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென டிவி வெடித்து அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு எலெக்ட்ரானிக் பொருளாக இருந்தாலும் சரி அதனை அதிக நேரம் சூடேறாமல் பார்த்துக்கோள்ள வேண்டும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.