தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவும், அரசு பள்ளி மாணவர்களை உலகத்தரத்தில் உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக 'நான் முதல்வன் திட்டம்', 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 'அனைவருக்கும் IITM' போன்ற ஏராளமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்து வந்த அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனை மேலும் உயர்த்த 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது.
அதன் பரப்புரை வாகனத்தை கடந்த 17ம் தேதி கொளத்தூர் தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். அத்துடன் பரப்புரை பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இது திமுக அரசின் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த தகவலை தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
இந்தாண்டு சேர்க்கை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், வழக்கமாக சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்தாண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அரசு பள்ளிகளை பொதுமக்கள் மீண்டும் நம்பத்தொடங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.