சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் சமீப சில மாதங்களாக விளையாடிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழக்கும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கபடி விளையாடி களத்திலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூடைப்பந்து போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை எச்.ஏ.டி.பி., உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், நீலகிரி கூடைப்பந்து சங்கம் இணைந்து மாநில அளவில் மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று மதுரை–கோவை அணிகள் மோதின.
இந்த போட்டி நடந்துகொண்டிருந்த போது, மதுரை அணி வீரர், நேரு ராஜன், திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றநிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும், மதுரையில் உள்ள அவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.