தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2023) சட்டமன்றப் பேரவையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அளித்த பதில்:-
நாங்கள் தீர்ப்புக்குள்ளே போகவில்லை; அந்த வழக்கின் விசாரணைக்குள்ளேகூட போகவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில்தான், இன்னும் சில விளக்கங்களை, இந்தக் கொடநாடு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், நான் விளக்கிட விரும்புகிறேன்.
இந்த வழக்கின் குற்றவாளி சயான் சிறையில் இருந்து விடுதலையான 29-7-2021 அன்று காலை சிறை அதிகாரிகளிடம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார்.
தற்போது இந்த வழக்கில் சில உண்மை நிலவரத்தைத் தெரிவிக்க உள்ளதாகவும் கூறி அளித்த மனு உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வழக்கில் மேல் புலன் விசாரணை நடத்த அனுமதி கோரி அரசுத் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் எதிரி சயானை விசாரணை செய்தனர். மேல் விசாரணைக்கு எதிராக அம்மா பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தனிப்படை, ஏற்கெனவே விசாரணை செய்த சாட்சிகள் மற்றும் புதிய சாட்சிகளை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவும், சாட்சியங்களை மறைத்த காரணத்திற்காகவும் இறந்துபோன கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை 25-10-2021 அன்று கைது செய்தனர்.
தொடர்ந்து தனிப்படையினர் 306 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு 19-10-2022 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்தது ஏப்ரல் 24, 2017; 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த சம்பவம் நடந்ததும் உடனடியாக ஆதாரங்களை சேகரித்து, தடயங்களைக் காப்பாற்றி, வாக்குமூலங்களையும் முறையாகப் பெற்று வைத்திருந்தால், விரைந்து வழக்கை முடித்திருக்க முடியும். ஆண்டுகள் பல ஓடிய காரணத்தால், சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டு வர தாமதம் ஏற்படுகின்றது. ஆனாலும், முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்களுடைய வீட்டில் நடந்த விவகாரம் இது என்கிற காரணத்தால், அவர் சாதாரண நபர் அல்ல; முதலமைச்சராக இருந்தவர். ஆக, அவர் இருந்த அந்த பங்களாவிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது வேதனைக்குரிய ஒன்று. எனவே, இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளியை நிச்சயமாக விரைவில் கண்டுபிடிப்போம்.