“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்” என்று காவல் உதவியாளர் பட்டியலின பழங்குடியினர் பகுதியில் வசிக்கும் மாணவ மாணவியர்களுக்கு படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு உண்டாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர் பேட்டை கிராமத்தில் அமைந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் பியூலா. இவர் பணியாற்றி வரும் பள்ளியில் 50 மாணவ மாணவியர்கள் கல்வி கற்று வந்தனர்.
பட்டியல் இன பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதியில் இருந்து 11 மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுவிட்டனர். இந்த நிலையில் தலைமையாசிரியை வைத்த கோரிக்கையை ஏற்று பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் திடீர் நகர் பகுதிக்கு நேரடியாக சென்று பழங்குடி மாணவர்களின் கல்வி எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் கல்வி குறித்து முழு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் “பள்ளிகளில் 5 நாட்கள் முட்டை போடுறாங்க, 2 நாள் பயிறு போடுறாங்க. உணவுக்கு பிரச்சனை என்றால் என்னை வந்தால் பாருங்கள். தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்” என காவலர் பேசியது அங்கிருந்தவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் பள்ளிக்கு சென்று இறுதி தேர்வை எழுத உதவி புரிந்துள்ளார் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் ஏற்படுத்திய விழிப்புணர்வு மாணவ மாணவியர்களின் கல்வி எதிர்காலத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. இதனால் தற்போது இடையில் கல்வியை நிறுத்திய மாணவ மாணவியர்கள் மீண்டும் தங்களது கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது என அப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவன் மேற்கொண்ட நூதன விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.