தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரிஷ் எந்தவித சொந்த வருமானமும் அவருடைய பெயரில் இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் முடக்கி உள்ளனர்.
தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும், நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆர்.கே.சுரேஷ் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் ஆர்.கே.சுரேஷுக்கு இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்தின் மூலம் அதிகாரிகளிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆர்.கே.சுரேஷ் பணத்தை திருப்பி ஒப்படைக்கவில்லை என ரூசோ விசாரணையின் போது வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆருத்ரா மோசடி வழக்கை போலிஸார் விசாரிக்க தொடங்கியதுமே ஆர்.கே.சுரேஷ் சுற்றுலாவுக்காக துபாய் சென்றுள்ளார். ஆனால் வழக்கில் இருந்து தப்பிக்க அங்கேயே தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவரை .சென்னை அழைத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில் இந்த விவகாரத்தில் பாஜகவின் முக்கிய புள்ளிகளும் உள்ளது கண்டறியப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் இராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி சுதாகர் என்பவர் சிக்கினார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பாஜகவில் மாநில பொறுப்பு வாங்கி தர ஆருத்ரா ஹரிஷிடம் லஞ்சம் பெற்றதாக ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக அள்ள அள்ள வரும் புதையலை போன்று பல தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை தி.நகரிலுள்ள பாஜக அலுவலகமான கமலையாலயத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
மேலும் மோசடியில் தொடர்புடைய பாஜகவினருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த பாஜகவின் முக்கிய நிர்வாகியான கேசவ விநாயகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனுவை கொடுக்க முயன்றபோது, அதனை வாங்க மறுத்தததோடு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்றவாறு ஓடினார். பாதிக்கப்ட்டவர்கள் கோஷமிட்டு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் இதனால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆருத்ரா மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாகவும், பணம் உள்ளவர்களுக்கு தான் பா.ஜ.கவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும் கூறி அக்கட்சியின் பொருளாதார பிரிவு செயலாளரான எம்.ஆர்.கிருஷ்ணபிரபு கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த மோசடி வழக்கில், லட்ச கணக்கான மக்களிடம் ரூ.2438 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளதாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துனர். மேலும் V.ராஜசேகர் (வில்லிவாக்கம்) ; உஷா (திருவள்ளூர்) ; தீபக் கோவிந்த் பிரசாத் (திருமால் நகர், பூந்தமல்லி) ; நாரயாணி (பூம்புகார் நகர், சென்னை 99) ; ருமேஷ் குமார் (செட்டிபுனியம், செங்கல்பட்டு). ஆகிய 5 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கண்டு பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.