விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(29). பட்டப் படிப்பு முடித்துள்ள இவர், கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில், TamilNadu Police என்ற பெயரில் போலியாக முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
முகப்பில் தமிழ்நாடு காவல்துறையின் இலட்சினையையும் வைத்துள்ளார். எனவே, இது உண்மையான முகநூல் பக்கம் என நம்பி, சுமார் 46 ஆயிரம் பேர் இந்தக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும், அதில் பல தவறான தகவல்களையும் பரப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, முகநூலில் தமிழ்நாடு காவல்துறை சின்னத்தை முகப்பு படமாக வைத்திருந்த அந்தக் குழுவை ஆய்வு செய்தனர். Tamilnadu police என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் போலியான முகநூல் பக்கத்தில் காவல்துறைக்கு தொடர்பற்ற போலியான பல்வேறு பதிவுகளும் இருந்ததுள்ளது.
இந்த முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர் (Admin) யார்? என்பது குறித்து சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர் போலிஸ் இல்லையென்பதும் விசாரணையில் தெரிய வந்ததது.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலிஸார், தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1 நீதித்துறை நடுவர் கவிதா முன்னிலையில் தமிழ்ச்செல்வனை ஆஜர் படுத்தினர். அவரை வரும் ஏப்., 25 ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.