ஹைதராபாத்தில் இன்று வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து விட்டு பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மதியம் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமர் மோடிக்கு Gandhi Travel in TamilNadu என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் புதிய முனையத்தைச் சுற்றிப்பார்த்தனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைக் கொடியசைத்து பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி பகுதி இருப்புப் பாதை மாற்றுத் திட்டத்திற்கும், மதுரை - செட்டிகுளம் உயர்நிலை 4 வழிச்சாலை திட்டத்திற்கும் மற்றும் நத்தம் துவரங்குறிச்சி 4 வழிச்சாலை திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர்.
மேலும் தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் சேவையும், திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வந்தே பாரத் ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் முன்னோடியாகத் திகழும் அண்ணாவின் பெயரில் உள்ள விமான நிலையம் திட்டம், வந்தே பாரத் என பல திட்டத்தைக் கொண்டு வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி.
வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்தால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளரும், கூட்டாட்சி தத்துவம் வளரும். சாலை திட்டத்தை மேம்படும் ஒன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.
சென்னை மதுரவாயல், சென்னை தாம்பரம் உயர்மட்ட சாலை, என பல முக்கிய திட்டம் நிறைவேற்ற வேண்டும். சென்னையிலிருந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. மேலும் புதிய திட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையம் விரிவாக்கம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவும், மெட்ரோ ரயில் திட்டம் 2ன் ஒன்றிய அரசு நிதி கிடப்பில் உள்ளது. அதனை வழங்க வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.