கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கச்சிராபாளையம் கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரியான பெரியசாமி என்பவரிடம், அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய மனைவியின் பெயரில் தாட்கோவில் இருந்து கடன் பெறுவதற்காக, சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் கோரியிருக்கிறார்.
அதற்கு பெரியசாமி, 300 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் கையும் களவுமாக கைது செய்தனர். கடந்த 2007ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், பெரியசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில், தன்னுடைய மகனின் திருமணத்திற்கு வரமுடியாததால் குமார் 300 ரூபாயை தன்னுடைய பாக்கெட்டில் திணித்ததாக தெரிவிக்கபட்டது.
காவல்துறை தரப்பில், ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டு மட்டுமல்லாமல், பூர்த்தி செய்யப்படாத சான்றிதழ்களுக்கும் பெரியசாமியிடம் இருந்து கைப்பற்றியதாகவும், அவர் லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ்கள் வழங்கியது நிருபணமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட போது பெரியசாமியிடம் இருந்து பூர்த்தி செய்யப்படாத சான்றிதழ்கள் கைபற்றப்பட்டுள்ளதால், மகன் திருமணத்துக்கு மொய்யாக 300 ரூபாயை குமார் கொடுத்தார் என்ற வாதத்தை ஏற்க முடியாது எனக் கூறி, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.