மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு இடங்களுக்கும் அவர் சென்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்த அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு கட்சி கொடியினை ஏற்றிவிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார். அந்த மேடை மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டிருந்த நிலையில், அன்புமணி அதில் ஏறியதும் அவரோடு அளவுக்கு அதிகமான நபர்கள் அந்த மேடை மீது ஏறினர்.
இதன் காரணமாக பாரம் தாங்காமல் அந்த மேடை திடீரென சரியத் தொடங்கியது. இதில் உஷாரான அன்புமணி விழா மேடையில் இருந்து கீழே குதித்தார். ஆனால் மேடை மீது இருந்த பலர் கிழே விழுந்தனர். இதில் எதிர்பாராத நிகழ்வில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அன்புமணிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து அன்புமணி அங்கிருந்த இருக்கை ஒன்றில் ஏறி அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசினார். அன்புமணி இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.