`கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!’ - இடம்.. இயக்கம். - எம்.எம்.அப்துல்லா எம்.பி
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம், ஒலிக்கப்படும் போதெல்லாம் இயல்பாகவே ஓர் ஊரின் பெயரும் சேர்ந்தே எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுதான் கல்லக்குடி..!
தமிழ்ச் சமூகம் எவ்வளவோ போராட்டங்களைக் கண்டிருக்கிறது. அதிலெல்லாம் தனித்துவமானது மும்முனைப் போராட்டம். திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழ்நாட்டின் இண்டு இடுக்கெல்லாம் எடுத்துச் சென்ற போராட்டம் அது. மகத்தான அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட போராட்டமும் அதுவே. அதென்ன மும்முனைப் போராட்டம்?
மும்முனைப் போராட்டம்!
1953-ஆம் ஆண்டு. இராஜகோபாலாச்சாரி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு. தமிழர்களை `நான்சென்ஸ்’ என்று விமர்சித்த நேருவுக்கு எதிர்ப்பு. கல்லக்குடியில் ஒரு வடஇந்திய நிறுவனம் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தியது. அந்த நிறுவனத்தின் செல்வாக்கு காரணமாக, `கல்லக்குடி’ என்கிற பெயரையே `டால்மியாபுரம்’ என்று மாற்றுவதற்கு அன்றைய அரசு ஒப்புக் கொண்டதற்கு எதிர்ப்பு.
ஜூலை 14-ஆம் நாளில் குலக்கல்வித் திட்டத்துக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது, மறுநாள் ஜூலை 15-ஆம் நாளில் நேருவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் ரயில் மறியல் மற்றும் டால்மியாபுரம் பெயர் மாற்றத்துக்காக கல்லக்குடியில் போராட்டம் என்று அறிஞர் அண்ணா ஆணையிட்டார்.
காவல்துறைக்குப் பாடம்!
ஜூலை 14-ஆம் நாளன்றே அண்ணா, நாவலர் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள், கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடந்தபோதே கைதானார்கள். மறுநாள் ரயில் மறியல் போராட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டு போராட்டம் வெற்றிபெற்று விடக்கூடாது என்று ஆளும் தரப்பு நினைத்தது.
ஜூலை 15-ஆம் நாளன்று அறிவித்தபடியே ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு ரயில் நிலையத்தை முற்றுகையிட்டார் கலைஞர். காவல்துறையின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டுப் போராட்டத்தை நடத்திய கலைஞரை அவமானப்படுத்த காவல்துறை முடிவெடுத்தது. அவரைக் கைது செய்யாமல் விட்டுவிட்டால், அங்கே போராட்டம் நடந்ததற்கான சுவடே இருக்காது என்று நினைத்தது.
காவல்துறையின் தந்திரத்தை கலைஞர் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்க முடிவெடுத்தார். வெறும் 25 பேரோடுதான் ரயில்நிலையத்துக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்பட்டார். ரயில்நிலையத்தின் பெயர்ப்பலகையில் `டால்மியாபுரம்’ என்று இருந்ததை மறைத்து, `கல்லக்குடி’ என்று பேப்பரில் எழுதப்பட்டதை ஒட்டினார் கலைஞர்.
தண்டவாளத்தில் தலைவன் தலை!
எவரும் எதிர்பாரா வண்ணம் திடீரென, புறப்படத் தயாராக இருந்த ரயிலின் முன்பாக போய் தண்டவாளத்தில் படுத்துவிட்டார் கலைஞர். கலைஞரைத் தொடர்ந்து, அவருடன் வந்த 25 பேரும் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார்கள்.
காவல்துறை இதை எதிர்பார்க்க வில்லை. டால்மியாபுரம் பெயர்ப் பலகையை அழித்து விட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தார்கள். ``கல்லக்குடி’ என்று பெயர் மாற்ற அறிவிப்பு வரும் வரை தண்டவாளத்திலிருந்து தலையை எடுக்க மாட்டோம்’’ என்று கலைஞர் கர்ஜித்தார்.
ரயில் நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் இக்காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். ``ஏன் இப்படிப் பண்ணுறீங்க? உங்களைத்தான் போராட்டம் நடத்த அனுமதிச்சோம் இல்லையா? பெயர்ப் பலகையில் கல்லக்குடின்னு ஒட்டிட்டீங்க. கிளம்பிப் போங்க’’ என்றனர் போலீசார்.
``இங்கே கூடியிருக்கும் பொதுமக்களில் ஒருவராவது `கல்லக்குடி’ என்கிற பெயர் வேண்டாம். டால்மியாபுரமே போதுமென்று சொல்லட்டும். நாங்கள் கிளம்பிப் போகிறோம்’’ என்று பதிலளித்தார் கலைஞர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவர்கூட அதற்கு முன்வரவில்லை.
ரத்தத்தில் கல்லக்குடி!
ரயில் கலைஞரின் தலைக்கு அருகே வந்து நின்றது. கல்லக்குடி ரயில் நிலையத்தில் குழுமியிருந்த பொதுமக்கள் இக்காட்சியைக் கண்டதுமே அவர்களும் இணைந்து `தமிழ் வாழ்க, கல்லக்குடி பெயர் மாற்றம் செய்’ என்று கோஷமிட ஆரம்பித் தார்கள். வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கலைஞர் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
மேலும் அடுத்தடுத்து இரண்டு போராட்டக் குழுக்கள் கல்லக்குடி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டன. இதற்கிடையே கலைஞர் கைது செய்யப்பட்ட விவரமும், அவர் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்குக் காட்டிய தீரமும் தமிழகமெங்கும் காட்டுத்தீயாய்ப் பரவியது.
தமிழ்நாட்டின் பெருநகரங்களில் எல்லாம் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர் தொண்டர்கள். வெறும் 25 பேரோடு கலைஞர் ஆரம்பித்த போராட்டம், 5,000 பேர் கைதாகும் அளவுக்குப் பெரிதானது. மும்முனைப் போராட்டத்தின் முத்தாய்ப்பான நிகழ்வாகவும் அமைந்தது.
எந்தப் போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்ய, அன்றைய முதல்வர் ராஜகோபாலாச்சாரி திட்டமிட்டாரோ, அந்தப் போராட்டமே அவரது பதவியைப் பறிக்குமளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. கலைஞர் பின்னர் ஒருமுறை கேட்டபோது சொன்னார். ``ஒருவேளை அன்று ரயில் என் கழுத்தின் மீது ஏறி தலை துண்டாகி இருந்தால், வழிந்த ரத்தத்தை எடுத்து `கல்லக்குடி’ என்று பெயர்ப்பலகையில் எழுதியிருப்பார் எங்கள் தலைவர் அண்ணா..!’’
கலைஞர் காட்டிய இந்த மகாவீர தீரத்தின் போது அவருக்கு வயது முப்பதைக் கூட எட்ட வில்லை. இந்த மகத்தான போராட்டம்தான் அவரை பாட்டுடைத்தலைவனாகவே ஆக்கியது. `கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்கிற இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கம்பீரக்குரல் இப்போது உங்கள் காதில் கேட்குமே?
(பயணிப்போம்)