தி.மு.க

இடம் பொருள் கலைஞர் -1 : அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் சிந்தித்துச் செயல்படுத்தி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அவர் உருவாக்கிச் சென்ற கட்டமைப்புகள் குறித்து வாரந்தோறும் இங்கு...

இடம் பொருள் கலைஞர் -1 : அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்ணா நூற்றாண்டு நூலகம்: ஆசியாவின் அறிவுச் சுரங்கம்

`செயல்... அதுவே சிறந்த சொல்' என்பார்கள். ஆழமான சிந்தனைக்குப் பின் வருவதே ஆற்றல் மிகு செயல். பல்வேறு துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் சிந்தித்து செயல்படுத்தி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அவர் உருவாக்கிச் சென்ற கட்டமைப்புகள் குறித்து வாரந்தோறும் இங்கு.. 

`காலையிற்படி கடும்பகல்படி / மாலை இரவு பொருள்படும்படி / நூலைப் படி...' என்று எழுதினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அப்படி காலை முதல் இரவு வரை மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டி எழுப்பிய அறிவுச் சுரங்கம்தான் அண்ணா நூற்றாண்டு நூலகம்.

சென்னை கோட்டூர்புரத்தில் 172 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிக்கல் நாட்டப்பட்டு அவரின் 102-வது பிறந்த நாளில் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது.

நூலகத்தின் முகப்பில் புத்தகம் படித்தபடி நம்மை வரவேற்பது போன்று அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குக் கீழ், `வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும்' என்று எழுதப்பட்டுள்ள அவரின் பொன்மொழிதான் இந்த நூலகத்தை அமைப்பதற்கான உந்து சக்தியாக கலைஞருக்கு இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது.

இடம் பொருள் கலைஞர் -1 : அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!

ஆசியாவின் அறிவொளி

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் இது. தரைதளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டுள்ள‌ இந்த நூலகம் சுமார் நான்கு லட்சம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான‌ புத்தகங்கள் இங்கு உள்ள‌ன. இந்த எண்ணிக்கையை 12 லட்சமாக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு சிங்கப்பூர் நூலகம்!

சிங்கப்பூர் தேசிய நூலகத்தைப் போல தமிழ்நாட்டில் ஒரு நூலகத்தை அமைக்க, முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஒரு கனவு இருந்திருக்கக்கூடும். அந்தக் கனவுதான் `அண்ணா நூற்றாண்டு நூலக' மாக நனவானது என்றால் அது மிகையில்லை! 

``இக்கட்டடத்தின் வரைபடம் தொடங்கி, திறப்புவிழா வரை, இந்த நூலகத்தின் வளர்ச்சியை அணு அணுவாகக் கவனித்து வந்தார் கலைஞர். மேலும், இது ஒரு சாதாரணக் கட்டடமாக அல்லாமல், ஆற்றலைச் சிக்கனப்படுத்தக் கூடிய பசுமைக் கட்டடமாகவும் விளங்குகிறது. அதற்காகப் பல விருதுகளையும் இந்நூலகம் பெற்றுள்ளது'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுள்ளார். 

2011-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அன்றைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வந்திருந்தபோது, இந்நூலகத்தின் அமைப்பையும், அவரது நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் சர்வதேசத் தரத்தையும் வியந்து பாராட்டினார்.

இடம் பொருள் கலைஞர் -1 : அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!

வழிகாட்டும் `ஒளி..!'

இங்கு பார்வைத்திறன் சவால் கொண்டோரும் பிரெய்லி மூலம் படிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கென தனிப்பிரிவும் இயங்கி வருகிறது. இப்பிரிவில் பயிற்சிப் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வென்று பணி வாய்ப்புகளை பெற்றுள்னர். 

 `பொன்மாலைப் பொழுது' என்ற நிகழ்ச்சி சனிக்கிழமைதோறும் நடத்தப்படுகிறது. இதில் பிரபலங்கள் பலர், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். வாரநாட்களில் சுமார் 1,000 வாசகர்களும், வார இறுதி நாட்களில் 1,500க்கும் மேற்பட்டோர் இந்நூலகம் மூலம் பயன்பெறுகின்றனர்.

`ஒவ்வொரு வீட்டிலும் புத்தகச் சாலை வேண்டுமென்று அண்ணா சொன்னாரே, அதைப்போல ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு புத்தகச் சாலை வேண்டும் என்ற கொள்கையின்படி இந்த நூலகம் அமைக்கப் பட்டிருக்கிறது. இது அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ள காட்சி' என்று இந்த நூலகத்தைத் திறந்து வைத்து பேசும் போது கலைஞர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அண்ணாவின் தம்பி அளித்த கொடையை முறையாகப் பயன்படுத்தி முன்னேறுவோம்!

...வலம் வருவோம்

banner

Related Stories

Related Stories