கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த சங்கர் என்பவர் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக தான் போட்டுள்ள கனிம வளங்கள் மோசடி வழக்கில் திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் தன்னை கொலை செய்து விடுவாதாக மிரட்டுகிறார்.
மேலும் முறையான அனுமதி இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக சுரங்கம் தோண்டி உள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் தனி நபர் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தட்டக்கல் என்ற இடத்தில் ஒன்றரை ஏக்கர் கனிம வளங்கள் நிறைந்த நிலத்தை வாங்கியுள்ளார். அதன் பின்பு அவர் கடும் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் என்னிடம் இது போன்ற இடம் வாங்கி இருந்தேன் என்று கூறினார்.
அதன் பேரில் நான் அங்கு சென்று பார்த்த பொழுது அந்த நிலத்திலிருந்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சவடு மணல் போட்டு மூடி இருந்தனர். பக்கத்தில் மூடப்பட்டிருந்த குவாரியில் இருந்து சட்டவிரோதமாக அக்ரிமெண்ட் பதிவு செய்து, எங்கள் இடத்தில் இருந்த கனிம வளங்களை முப்பதாயிரம் கியூபிக் மீட்டர் வரை திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் என குற்றம் சாட்டினர்.
மேலும், இது தொடர்பாக புகார் அளிக்கும் பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விசண்முகம் உதவியாளர் ஆனந்த் நேரடியாக தொடர்பு கொண்டு என்னை மிரட்டி, அந்த இடத்திற்கு சென்றாள் உங்கள் மீது குண்டர் சட்டத் போட்டப்படும், நீங்கள் வேறு எங்கே சென்றாலும் அமைச்சர் சி.வி சண்முகம் பார்த்துக் கொள்வார் என மிரட்டியதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, கனிம வளத்துறை சேர்ந்த கிருஷ்ணகிரி எல்.சுரேஷ் என்பவர் என்னை ஆள் வைத்து மிரட்டடினர், இது குறித்து விசாரித்தால் சசிகலா சொல்லி மிரட்டியதாகவும், கழுத்தை அறுத்து விடுவேன் என்றும் அவர் கூறியதாக கூறிய சங்கர், அந்த காலகட்டத்தில் சிறையில் இருந்த சசிகலா எப்படி இவர் பேசி இருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.
பின்பு சட்டப் போராட்டம் நடத்தி உயர்நீதிமன்றத்தை நாடி, அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையை விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டினர். மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆதாரத்தை கொடுத்தும் அவர் முறையாக விசாரணை நடத்தவில்லை. அதனால் இது தொடர்பாக இன்று நேரடியாக சந்தித்து சிபிசிஐடி அல்லது தனி நபர் குழுவை அமைத்து அங்கு என்ன நடந்தது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்.
தன்னை கொன்று விடுவதாக மிரட்டிய ஆடியோக்களும், மற்றும் முறையான அனுமதியில்லாமல் கல் குவாரி நடத்த போலி பத்திரங்களையும் என்னிடம் உள்ளது. ஆகவே அந்த இடத்தில் சிபிசிஐடி மற்றும் தனி நபர் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான வழக்கை விரைவில் காவல்துறையினர் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.