தூத்துக்குடி அருகே சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அந்த சூதாட்டத்தில் தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
ஆனால் போட்ட பணத்தை எப்படியாவது திரும்ப எடுக்க வேண்டும் என்று எண்ணிய நல்லதம்பி, தனது அண்ணனிடம் கடன் பெற எண்ணியுள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அண்ணன் முத்துராஜிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு தோற்றத்தால், பணம் முழுவதையும் இழந்துள்ளார்.
இந்த சூழலில் தான் கொடுத்த பணத்தை அண்ணன் முத்துராஜ் தனது தம்பி நல்லதம்பியிடம் கேட்டுள்ளார். அவரோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறியும், இப்போ தரேன், அப்போ தரேன் என்று கூறியும் இழுத்தடித்துள்ளார். மேலும் பணம் கேட்கும்போதெல்லாம், தங்கள் பூர்வீக வீட்டை விற்று அதில் வரும் பணத்தை தன்னிடம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார் தம்பி நல்லதம்பி.
இப்படியே இந்த நிகழ்வு அடிக்கடி நிகழந்து வந்துள்ளது. இதனால் பொறுமை இழந்த அண்ணன் முத்துராஜ் தனது தம்பியை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி நேற்று இரவு தனது தம்பியிடம் நேக்காக பேசி தனது வண்டியில் பண்டாரம்பட்டி அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார் முத்துராஜ். அங்கே அவரது தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் முத்துராஜ் சரணடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து பண்டாரம்பட்டி காட்டுப்பகுதியில் கிடந்த நல்ல தம்பியின் உடலை கைப்பற்றிய சிப்காட் காவல் துறையினர் அதனை உடற் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து வியார்னா மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன், தனது தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.