தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதையடுத்து நேற்றில் இருந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைல் மானியக் கோரிக்கை பதிலுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியது வருமாறு:-
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்தவண்ணம் உள்ளன. இந்த நகராட்சிகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் மாநகராட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இதே போல, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
எனவே நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
ஊராட்சி உள்ளாட்சிகள் அமைப்பு பதவி டிசம்பர் 2024 நிறைவடைவதால் அதற்கு பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என ஊரக வளர்ச்சித்துறை, அமைச்சர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.