தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்தநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கூடிய சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது, அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித்தரப்படுமா? எனவும், கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சிதிலமடைந்துள்ளதால் அதனைப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் அமைக்கப்படும்
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து சிதிலமடைந்த புதிய நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.