திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி - சத்யா தம்பதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்னர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கடந்த 18-ம் தேதி கோபி - சத்யா தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
நேற்று மாலை நேரத்தில் சத்யாவின் கணவர் கோபி வேலை நிமித்தமாக வெளியே சென்று இருந்த நிலையில், சத்யா தனது குழந்தையை அருகில் படுக்க வைத்து சிறிது நேரம் தூங்கியுள்ளார். பிறகு கண் விழித்து பார்த்த போது அருகில் படுக்க வைத்திருந்த குழந்தை காணாமல் போயிருந்தது. இதனால் பதறிப்போன சத்யா குழந்தையை தேடியுள்ளார்.
ஆனால் எங்கும் கிடைக்காததால் தனது கணவருக்கு தெரிவித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகப்படும்படி பெண் ஒருவர் வந்து செல்வது தெரிய வந்தது. மேலும் அந்த பெண் மருத்துவமனைக்குள் கையில் குழந்தையோடு சென்ற அவர், வெளியில் செல்லும்போது குழந்தை இல்லை. மாறாக அவர் அணிந்திருந்த கைப்பை (Handbag) பெரிதாக இருந்தது. எனவே அதனுள் குழந்தையை போட்டு எடுத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.
இதையடுத்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சுமார் 10 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர், அந்த குழந்தை இருக்கும் இடத்தை அறிந்தனர். அதன்படி இடுவாய் வாசுகி நகர் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்தான் அந்த குழந்தையை கடத்தியது என்பதை அறிந்த அதிகாரிகள் அவரது வீட்டுக்கு விரைந்தனர்.
பின்னர் குழந்தையை மீட்ட அதிகாரிகள், விரைந்து தாய் சத்யாவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்ததும் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுது தூக்கினார். தொடர்ந்து பாண்டியம்மாளையும் கைது செய்த அதிகாரிகள் அவர் குழந்தையை ஏன் கடத்தினார் என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கு குழந்தை இல்லாததால் கடத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.
எனினும் பாண்டியம்மாள் சொன்னது உண்மையா அல்லது இவரது பின்னால் குழந்தை கடத்தும் கும்பல் உள்ளதா என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன குழந்தையை விரைந்து 10 மணி நேரத்திற்குள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.