சவுதி அரேபியா நாட்டிலுள்ள ஜெட்டா விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு ஏர் ஏசியா விமானம் 164 பயணிகளுடன் நேற்று சென்று கொண்டு இருந்தது. அந்த விமானம் சென்னையைக் கடந்தபோது, விமானத்திலிருந்த வஹாப் அகமது என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருடன் வந்த நண்பர் இது குறித்து விமான பணிப்பெண்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து, முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த விமானத்தின் விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு, பயணியின் நிலமையை கூறி விமானத்தை அவசரமாகத் தரையிறங்க அனுமதி கேட்டார். பின்னர் உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் பயணியைப் பரிசோதித்தனர். அப்போது பயணிக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கிறது, என்பதை அறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மலேசியப் பயணி வஹாப் அகமது, அவருடைய நண்பருக்கும் அவசரக்கால மருத்து விசாக்கள் வழங்கினார்.
இதை அடுத்து இருவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வஹாப் அகமதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சென்னை விமான நிலைய போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை மலேசியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.