தமிழ்நாட்டில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரண்டாக உடைந்தது. ஒரு கும்பல் சசிகலாவிடமும், மற்றொரு கும்பல் ஓபிஎஸ் இடமும் இருந்தது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க, ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார்.
இதனால் இரண்டாக இருந்த கட்சி மூன்றாக மாறியது. இந்த சூழலில் சசிகலாவை கழட்டிவிட்ட இபிஎஸ், ஓபிஎஸ்ஸுடன் கைகோர்த்தார். இதற்கு பின்புலமாக பாஜக இருந்தது. பாஜகவின் அஜெண்டாவிற்கு ஏற்ப பதவியை பிரித்து கொண்ட ஓபிஎஸ் - இபிஎஸ் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் படுதோல்வியை சந்தித்தது அதிமுக.
தொடர்ந்து அதிமுகவில் எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக தோல்விக்கு காரணம் நீதான் என்று ஓபிஎஸ் - இபிஎஸ் குடுமி பிடி சண்டை போட்டுக்கொள்ளாத அளவுக்கு அடித்துக்கொண்டனர். இந்த மோதல் காரணமாக இபிஎஸ் க்கு ஆதரவாக ஒரு அணியும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதராவாக ஒரு அணியும் பிரிந்தது.
பின்னர் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஒபிஎஸிடம் இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை பறிப்பதாக இபிஎஸ் அறிவித்தோடு, அதிமுகவில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட்டார். தொடர்ந்து ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் பார்க்கும் இடங்களில் எல்லாம் முட்டி மோதிக்கொண்டு வருகின்றனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸுக்கு எதிராக பல இடங்களில் அதிகமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதோடு அவர் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அவருக்கு எதிராக ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் எடப்பாடிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திண்டுக்கல் பகுதிகளில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பெயரில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் "எடப்பாடியே ! அதிமுகவை அழிக்கும் துரோகி பழனிசாமியே ! கட்சியை அழிக்காமல் கழகத்தைவிட்டு வெளியேறு ! வெளியேறு ! இல்லாவிடில் தொண்டர்களால் தூக்கி வீசப்படுவாய். " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டர்கள் 'திண்டுக்கல் கிழக்கு மாநகர், ஒன்றிய கழகத்தொண்டர்கள்' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. முன்னதாக இதே போல் எடப்பாடிக்கு எதிராக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அண்மையில் கூட அதிமுக தொண்டர்களே எடப்பாடிக்கு "எட்டு தோல்வி எடப்பாடி" என்று குறிப்பிட்டு கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.