தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. மாணவர் இன்று காலை ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். பின்னர் தமிழ் மொழி விடைத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வி எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கை, கால்கள் முறிந்த நிலையிலும் ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள் உட்படஅனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், ஓ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் உமாமகேஸ்வரி. இவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் துணி எடுக்கும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கை மற்றும் கால்கள், குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து மாணவி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டு போடப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கை, கால்களில் கட்டு போட்ட நிலையில் இன்று தொடங்கிய பொதுத் தேர்வை எழுத மாணவி தனது உறவினர்கள் உதவியுடன் தேர்வு அறைக்கு வந்துள்ளார். இவருக்கு என்று தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இதையடுத்து மாணவி இன்று தனது முதல் தேர்வான தமிழ்ப் பாடத்தை எழுதிப் முடித்துள்ளார்.
பின்னர் அவர் கூறுகையில், "கை கால்கள் முறிந்த நிலையிலும் தேர்வு எழுதப் பெற்றோரும், பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கியது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என தெரிவித்துள்ளார்.