சென்னை ராணி மேரி கல்லூரியில் சென்னை பெருநகர காவல் துறை சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் "இயற்கையை பேணுவோம்" என்ற தலைப்பின் கீழ் 5 லட்சம் விதை பந்துகளை தயாரித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில், விதை பந்துகளை வனத்துறையிடம் வழங்கியதோடு, 5000 மரகன்றுகளை நட்டும் உலக சாதனை படைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, பசுமை தமிழகம் இயக்குனர் தீபக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மெய்யநாதன், "மனிதர்கள் தோன்றிய போது அவனுக்கு உணவுகள் அனைத்தையும் மரங்கள் தந்தது. ஆனால் மனிதன் தனது சுயநலத்திற்காக மரங்களையும் காடுகளையும் அழிக்க தொடங்கினான்.
இன்னும் 175 ஆண்டுகளில் நாம் காலநிலையில் பல பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறோம். காலநிலையை பாதுகாப்பதற்காக பசுமை தமிழகம் உருவாக்கப்பட்டது இந்த பசுமை தமிழகத்தின் நோக்கமானது தமிழகத்தில் காடுகளில் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதுதான்.
இந்த ஆண்டில் 10 கோடி மரங்களை நட வேண்டும் என இந்த துறை இலக்கு வைத்துள்ளது. இந்தத் துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று நம் பல பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். புயல் சுனாமி மழை வெள்ளம் என எல்லாவற்றையும் சந்தித்து அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறோம். இந்த ஆண்டு வானிலை அறிக்கை என்ன சொல்லுகிறது என்றால் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவை முதல்வர் அமைத்திருக்கிறார். மரக்கன்றுகளை நடுவதன் மூலம் வெப்பநிலை நம்மை பாதிக்காத வகையில் இந்த மரங்கள் உதவும். நம் அடுத்த தலைமுறையும் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது எனவே அனைவரும் ஒன்றுபட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
இயற்கைக்கு எதிரான பேராபத்தை நாம் சந்தித்து வருகிறோம். அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பை தான். பிளாஸ்டிக் குப்பை மக்குவதற்கு ஆயிரம் ஆண்டு காலம் எடுக்கிறது. இது விலங்குகள் இயற்கை மரங்கள் ஏன் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் எனவும் மஞ்சப்பை பயன்படுத்துவதை அவமானமாக பார்க்கிறோம், ஆனால் இதை உபயோகிப்பவரை முதல்வர் சுற்று சூழலை பாதுகாப்பாவறாக பார்ப்பதாக கூறினார்.