குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் கீழ் இயங்கும் புதிய ஆதார் மையத்தை திறந்துவைத்தனர்.
மேலும், மாங்காடு நகராட்சி அலுவலகத்திலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெருமந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் கருங்குழி பேரூராட்சி அலுவலகம், ஆகிய அலுவலகங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் கீழ் இயங்கும் புதிய ஆதார் மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், “ஆளுநருக்கு வாய் இருக்கிறது என்பது தெரிகிறது. நாள்தோறும் சனாதனம் பற்றி பேசுகிறார். அவருக்கு உண்மையிலேயே, இதயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதயம் இருக்கிறது என்றால் 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்குப் பிறகும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கையெழுத்து போடாமல் திரும்பி அனுப்புகிறார்.
அ.தி.மு.க, பா.ஜ.க பொருந்தா கூட்டணி. சமூக நீதியால் உச்சம் தொட்ட இரண்டு மாநிலங்களில் தமிழகமும், கேரளமும் உள்ளது. அப்படிப்பட்ட மாநிலத்தில் மீண்டும் மனுநீதியையும், சனாதன தர்மத்தையும் கொண்டு வருவதாக அரசியல் செய்கிறது பாஜ.க என்றால் அதற்கு அ.தி.மு.க முட்டு கொடுத்து கொண்டு இருந்தது.
தற்போது அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் விலகி விட்டனர். அதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஓடி கொண்டிருக்கிறது. சமூக நீதிக்கான எங்கள் கூட்டணியில் மாற்றம் வராது என எங்கள் தலைவர் கூறி விட்டார்” என தெரிவித்தார்.