இந்தியா முழுவதும் கிரிப் ஹைமார்க் என்ற கடன் தரவுகள் நிறுவனம் சில்லரை கடன் பிரிவில் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று ஒரு பகுப்பாய்வை நடத்தி வெளியிட்டுள்ளது. அதில் 35 வயது பெண்களே அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் டாப் 5 மாநிலங்களில் வீட்டுக்கடன். வணிக கடன் வாங்குவதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் முதலிடத்தில் உள்ளனர்.
வீட்டுக்கடன் வாங்குவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், வணிக கடன் வாக்குவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் தனிநபர் கடனில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சொத்துக் கடனில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.
அதோடு தென் மாநிலங்களில் உள்ள பெண்களே கடன் வசதியை அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த புள்ளி விபரங்களை அனைத்து தினசரி நாளேடுகளும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செய்தியைக் குறிப்பிட்டு மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"ஊடகங்களில் ஒரு செய்தி. தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே.
வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி.
பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி, #IWD2023-இல் மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்துள்ளார்.