தமிழ்நாடு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.. முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவும், நல்லமுறையிலும் பணிபுரிந்து வருவதாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.. முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism/) உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு கோவிட் பெருந்தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 4,16,047 மற்றும் இரண்டாம் கட்டமாக 4,66,025 தொழிலாளர்களுக்கும் மற்றும் கோவிட் இரண்டாம் அலை ஊரடங்கு காலத்தில் 1,29,444 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நேரடியாக சென்று வழங்கப்பட்டன.

மேலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, பல்வேறு ரயில்வே நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. கோவிட் காலத்தில், ரயில்வே நிலையங்களில் சிக்கித் தவித்த மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.. முழு விவரம் இதோ!

அதேபோல, கோவிட் பெருந்தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுகளின் இருப்பிடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அண்மையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது போலியான காட்சியென காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய பதிவுகள் உண்மைத் தன்மையற்றது, வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் உருவாக்குவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07.03.2023) திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அதற்கு அத்தொழிலாளர்கள், சிலர் ஆறு ஆண்டுகளாகவும், பலர் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு காலமாக இங்கு பணிபுரிந்து வருவதாகவும், சிலர் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், தங்களது பணிச்சூழல் மிகவும் நல்லமுறையில் உள்ளதாகவும், தரமான உணவு, தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டுள்ளன என்றும், இங்குள்ள மக்கள் தங்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதாகவும் தங்களுக்கு இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தங்களது சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாகவும் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.. முழு விவரம் இதோ!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், “தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் அச்சமின்றி பணிபுரிகிறார்கள் என்றும் நமது மாநிலத்திற்கு வருபவர்களை நேசக்கரம் கொண்டு வரவேற்பதுதான் நமது பண்பாடு, நடைமுறை இதன்பயனாக தமிழ்நாட்டுக்கு வரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

சென்னை, தொழிலாளர் ஆணையரகத்தில், 04.03.2023 அன்று காலை முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்களை, ஜார்க்கண்ட் மாநில காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் துறை அலுவலர்கள் நேரில் சந்தித்தனர். தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் செய்திகள் தவறானவை என்றும் முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் அக்குழுவினரிடம் விளக்கிக் கூறினார்.

அக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 04.03.2023 அன்று பிற்பகல் ஜார்க்கண்ட் மாநில அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை மற்றும் பொத்தேரி பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டுவரும் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில குழு காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் கீவலூர், காற்றாம்பாக்கம் ஊராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி உண்மை நிலவரம் அறிந்தனர். மேற்கண்ட ஆய்வுகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவும், நல்லமுறையிலும் பணிபுரிந்து வருவதாக குழுவினரிடம் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.. முழு விவரம் இதோ!

04.03.2023 அன்று மாலை சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுத் துறை செயலாளர், முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோரை, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் துறை சிறப்புச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், காவல் துறை தலைவர் (சிஐடி), காவல் கண்காணிப்பாளர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது சென்னை பிஹாரி சங்கத்தின் பிரதிநிதிகள், வேலையளிப்போர் பிரதிநிதிகள், வருவாய்த்துறை, தொழிலாளர் துறை மற்றும் தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிலைமையும் தமிழகத்தில் நன்றாக உள்ளது என்றும், பீகாரில் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது போலியானது என்றும் சென்னை பீகாரி சங்கம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வெளி மாநிலத் தொழிலாளர்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க வேலையளிப்போர் அமைப்புகளுக்கு தொழிலாளர் துறை அலுவலர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டும், நேரடி விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

06.03.2023 அன்று காலை ஜார்க்கண்ட் மாநில குழுவினர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பல்லடம், வெள்ளக்கோயில் மற்றும் அவினாசி ஆகிய பகுதிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி உண்மை நிலவரம் அறிந்தனர். அதேபோல பீகார் மாநிலக் குழுவினர் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர், தொப்பம்பட்டி மற்றும் வீரப்பாண்டி பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி உண்மை நிலவரம் அறிந்தனர். மேற்கண்ட ஆய்வுகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாங்கள் பாதுகாப்பாகவும், நல்லமுறையிலும் பணிபுரிந்து வருவதாக குழுவினரிடம் தெரிவித்தனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி வெளி மாநிலத் தொழிலாளர்களின் அச்ச உணர்வினை போக்கும் வகையில் ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் விளக்க கூட்டம் 05.03.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாராபுரம் உடுமலைப்பேட்டைச் சார்ந்த உணவு நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள், சாயத் தொழிற்சாலை பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து விளக்கக் கூட்டங்கள் நடத்தி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதியளித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories