தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூக வலைதளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் இந்திய பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.
இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில இந்தி ஊடகங்கள் இதனை உண்மை என நம்பி அப்படியே இந்த பொய் தகவலை செய்தியாக வெளியிட்டனர். மேலும், சில பத்திரிகையாளர்களும் இது உண்மை என நம்பி தங்கள் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக கருத்துக்களை பதிவிட்டனர்.
அந்த வீடியோகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் சில பாஜக ஆளும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மற்றொரு வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பொய் செய்தி பரவி வருவதால் தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு மாநில பிரச்னையாக உருவாக்க பாஜகவினர் திட்டமிட்டு பொய் செய்தியை பரப்பி வருகிறது. இதனால் இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு இந்த சம்பவம் குறித்து பொய் செய்தி பரப்பிய உ.பியை சேர்ந்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலத்தில் உள்ள சில ஊடகங்கள் இந்த செய்தியை அப்படியே தங்கள் செய்தியில் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், வட இந்தியர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுமே தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என வட இந்திய ஊடகங்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட இந்தியர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுமே தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர்.இன,மொழி வெறுப்புக்கு தமிழகத்தில் இடமில்லை.அரசியல் சுயலாபங்களுக்கு மக்களைப் பிரிக்க வேண்டாம்.
கடந்த சில நாட்களாக ஒரு சில வட இந்திய ஊடகங்களில் , சமுக ஊடகங்களில் தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைப் போலவும், தாக்குதல்கள் நடப்பதாகவும் பொய்யான தகவல்கள் செய்திகளாக வெளியாகி வருகின்றது. இது மிகப்பெரிய வேதனையையும் சமுக பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு எப்போதும் அனைத்து மத , மொழி,இன மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாகவே திகழ்கிறது. சுயநலமிகள்,சமுக விரோதிகளின் சூழ்ச்சிகளுக்கு ஒரு சில வட இந்திய ஊடகங்கள் பலியாகி தவறான பொய்யான செய்திகளை பொய் வதந்திகளை வெளியிடுவது பெரும் ஆபத்தானது.
எந்த தகவல் எவரால் கொடுக்கப்பட்டாலும் பரப்பப் பட்டாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான் ஊடகத்தின் அடிப்படை தன்மையாக இருக்க முடியும், இருக்க வேண்டும். பொய்யான தவறான செய்தி வெளியிட்ட ஒரு சில வட இந்திய ஊடகங்கள் உண்மை நிலை உணர்ந்து - தேவைப்பட்டால் தமிழகத்தில் உள்ள ஊடக நிறுவனங்களை ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு உண்மைச் செய்திகளை உடனடியாக வெளியிட வேண்டும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அன்புடன் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில், உடலுழைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தமிழக அரசு, காவல்துறை மிகச்சிறந்த வகையில் செயலாற்றி வருகிறது. புரிதல் இல்லாமல் தொடர்வண்டி ஒன்றில் ஏற்பட்ட சிறு தகராறு ஒன்றில் ஈடுபட்ட நபரைக் கூட தனிப்பட்ட எவரும் புகார் வழங்காத நிலையிலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தது தமிழக காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர் நலன் பாதுகாப்பு தொடர்பான எந்த கேள்விகளுக்கும் கள நிலவர உண்மை தகவல்களுக்கும் தமிழக அரசின் அதிகாரிகளையும், ஊடகங்களையும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தையும் தொடர்பு கொள்ளலாம். பொய்களை புறந்தள்ள உண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.