சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழாவை நடத்தியது.
அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இதேபோன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நடந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் மனுவில் தெரிவித்து உள்ளார்.
தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், மார்ச் 1ஆம் தேதி தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். காவல்துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறி, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணை வந்தபோது காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.