சென்னை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாலிங்கம். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி தனக்கு சொந்தமான சொகுசு காரில் மாமல்லபுரத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சித்தாலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கேளம்பாக்கம் அருகே வந்தபோது இளம் பெண் ஒருவர் மீது ராஜாலிங்கத்தின் கார் மோதியுள்ளது. இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் ராஜாலிங்கத்திடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும் ராஜாலிங்கத்திடம் சமாதானம் பேசுவதுபோல் பேசி அவரது கார் சாவியை பறித்துக் கொண்டுள்ளார்.
பின்னர் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பிவைத்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் ராஜாலிங்கத்தை தாக்கிவிட்டு அவரது காரை திருடிச் சென்றுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார் திருடிச் சென்றவர் குறித்து துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தனிப்படை அமைத்து கேளம்பாக்கம் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆணும், பெண்ணும் யார் என்பதை போலிஸார் அடையாளம் கண்டனர். இது பிரபல ரவுடி முரளி என்பதும் அவரது மனைவி சங்கீதா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் காரை திருடி விற்று அதில் கிடைத்த பணத்தில் இருவரும் சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிந்தது. பின்னர் முரளி அளித்த தகவல்படி காரை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
விபத்தைப் பயன்படுத்தி சொகுசு காரை திருடிய ரவுடி தம்பதியை 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்த தனிப்படை போலிஸாருக்கு ஆணையர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.