தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து சென்னை, பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற அவர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்தப்பெற்றார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
இதையடுத்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "முத்தமிழறிஞர் கலைஞரைப் போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதவாதத்தை எதிர்த்து வருகிறார். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் அணியைத் தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் சிறப்பானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாத்திகவாதி. ஆனால் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை" என தெரிவித்துள்ளார்.