நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம், வட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி கவிதா. இவர்களது உறவினர்கள் கந்தாயி, குஞ்சம்மாள், சுதா, சாந்தி மற்றும் கவிதாவின் தம்பி மகள் லக்ஷனா(4) ஆகியோர் கரூரை அருகே வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு காரில் சென்றுள்ளனர். பின்னர், திருவிழாவை முடித்து விட்டு நள்ளிரவு திருச்செங்கோட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவி ஒட்டிவந்துள்ளார்.
அப்போது பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அப்பகுதி மக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். ஆனால் காரில் வந்த கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரவி, அவரது மனைவி கவிதா, நான்கு வயது பெண் குழந்தை லக்ஷனா ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், குழந்தை லக்ஷனா கார் ஓட்டுனர் ரவி ஆகிய இருவருக்கும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.