திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி குணவதி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் மாற்றுத்திறனாளி குழந்தை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குணவதியின் கணவர் சுரேஷ் விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். தனது கணவர் இறந்து விட்டதை அடுத்து வேலைக்குச் செல்லாமல் மாற்றுத்திறனாளி மகனைப் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மூத்த குழந்தைக்கு Ataxia telangiectasia (AT) என்ற அரிய வகை நரம்பு சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னையில் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தைக்குச் சிகிச்சை அழைத்துச் சென்று கொண்டு வருகிறார்.
இப்படி அழைத்துச் செல்லும்போது குழந்தைக்கு மூன்று சக்கர வாகனம் இருந்தால் உதவியாக இருக்கும் என நினைத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அப்போது, தனது மகன் நடக்க முடியாமல் மாற்றுத் திறனாளியாக உள்ளது குறித்தும், மகனின் நோய் குறித்தும் கூறி தனக்கு உதவி செய்ய வேண்டும் என குணவதி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அழைத்து குழந்தைக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என கேட்டறிந்தார். மேலும் உடனடியாக குணவதியின் மகனுக்குச் சக்கர நாற்காலியை வழங்க உத்தரவிட்டார். துரிதமாகச் செயல்பட்ட அதிகாரிகள் 5 நிமிடத்தில் சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்து அதனை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கையாலேயே குணவதிக்கு வழங்கினர்.
அதனைப் பெற்றுக் கொண்ட அவர் தனது கோரிக்கையை ஏற்று 5 நிமிடத்தில் உதவி செய்த ஆட்சியருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.