சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூரியா, பாலாஜி, கவுதம். நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தர். அப்போது, இவர்கள் முன்னாள் சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது இவர்கள் மோதியுள்ளனர். இந்த விபத்தில் மூன்று பேரும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அந்த வழியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கிய வாலிபர்களை பார்த்த உடன் காரை நிறுத்தி அவர்களுக்கு முதலுதவி செய்துள்ளார். பின்னர் இரவு நேரம் என்பதால் ஆம்பலன்ஸ் வாகனத்திற்கு காத்திருக்காமல் மூன்று வாலிபர்களையும் தனது காரிலேயே ஏற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, படுகாயம் அடைந்த மூன்று பேரையும் சிகிச்சையில் சேர்த்துவிட்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கூறினார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். விபத்தில் சிக்கியவர்களை அமைச்சரே மருத்துவமனையில் சேர்த்து பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நேற்றிரவு விகடன் விருது நிகழ்வு முடிந்து இல்லம் திரும்பும்போது மெரினா கடற்கரை சாலையில் விபத்துக்குள்ளான இளைஞர்களை நம் காரிலேயே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தோம் மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்களின் சேவைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.