கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் அன்று சென்னை தியாகராயநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சென்ற பொழுது அங்கே முதல்வரை ஹர்ஷினி என்னும் 3ஆம் வகுப்பு பயிலும் ஒன்பது வயது சிறுமி மழலை குரலில் "தாத்தா பாய்" என்று வழியனுப்பி வைத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
அச்சிறுமி மழலை குரலில் முதல்வரை வழியனுப்பி வைத்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மழலை குரலில் வழியனுப்பி வைத்த 9 வயது சிறுமிக்கு ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையா நோய் இருப்பது சுகாதாரத்துறை சார்பில் கண்டறியப்பட்டு அச்சிருமிக்கு அரசு தரப்பில் சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது. சிறுமியின் தந்தை ராஜு சென்னை வேப்பேரியை சேர்ந்தவர்.
அவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சிறுமியின் தாய் கோகிலா சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். சிறுமியின் நோயை குணப்படுத்த சிறுமியின் பெற்றோர் நாள்தோறும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையா நோயால் பாதிப்புக்குள்ளான சிறுமியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சிறுமியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
ஹீமோபிலியா என்னும் ரத்தம் உறையா நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை குணப்படுத்துவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உறுதி அளித்தனர்.
தன் குழந்தைக்கு பிறந்தது முதல் இந்த வகையான நோய் இருந்து வருவதாகவும் சிறுமியின் மருத்துவ தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்த பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் அழைக்கப்பட்டு அவர்களை நேரில் கண்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் மருத்துவ தேவைக்காக உதயநிதி ஸ்டாலின் உதவித்தொகை வழங்கியதாகவும் சிறுமியின் தந்தை ராஜு தெரிவித்தார்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் பார்த்தது ஆச்சரியம் அளித்ததாகவும் எனது நோயினை குணப்படுத்துவதற்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து தருவதாக கூறிய முதல்வருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சிறுமி நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
முதல்வரை மழலை குரலில் வழியனுப்பி வைத்த வீடியோவினை ரிச்சர்ட் விஜயகுமார் என்னும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவன் காட்சிப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அச்சுமி சமூகவளைதளம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அம்மாணவனும் குழந்தையின் பெற்றோருடன் முதல்வரையும் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குழந்தை ஹர்ஷினி நலம் பெற வேண்டும். நலமுடன் ஆயிரம் சாதனைகள் படைத்திட வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ‘தாத்தா’ என்றழைத்து அன்பை பகிர்ந்துகொண்ட சிறுமி ஹர்சினியை சந்தித்து தி.மு.க இளைஞரணி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்தோம். சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.ஹர்சினிக்கு அன்பும் வாழ்த்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.