சென்னை எம்.ஜி.ஆர் நகர் புகழேந்தி தெருவில் வசித்துவருபவர் சரவணன் (வயது 36). இவர் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூண்டிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைத்து பீரோவில் இருந்த 130 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக சரவணன் எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் வெளிப்பகுதியில் சோதனை நடத்திவிட்டு பீரோவை சோதனை செய்ய கதவை திறந்துள்ளனர். அப்போது அதன் உள்ளே நகைகள் இருந்துள்ளது.
இதனைக் கண்டு குழம்பிய போலிஸார் சரவணன் மற்றும் அவரின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, நேற்று இரவு கணவன் மனைவி தனி தனி அறையில் உறங்கிய நிலையில், நள்ளிரவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது.
அதோடு காலையில் வீட்டின் பீரோ திறந்த நிலையில் இருந்ததால் திருடன் தான் வீட்டில் புகுந்து நகையை திருடிசென்றுவிட்டான் என நினைத்து அதனை சோதனை கூட செய்யாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. இதன் பின்னர் போலிஸார் அந்த தம்பதிக்கு அறிவுரை கூறி காவல்நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.