சென்னை அடுத்தே ஆவடி அருகே திருமுல்லைவாயல், எட்டியம்மன் நகரில் வசித்தவர் ஜான் ஜெபராஜ்/32. இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழரசிக்கு அயனாவரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது, அவரிடம் மருத்துவமனையில் தேவி என்ற பெண் அறிமுகமாகி பழகி உள்ளார். பின்னர் அவர் தனக்கு வாடகைக்கு திருமுல்லைவாயலில் வீடு வேண்டும் என்று கூறி தமிழரசியை வீட்டுக்கு வந்து சந்தித்துள்ளார். அப்போது தமிழரசியை கடைக்கு அனுப்பி தேனீர் வாங்கி வரச் சொல்லி அந்த நேரத்தில், ஒரு மாத ஆண் குழந்தையை வீட்டிலிருந்து தேவி கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து தமிழரசி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தியும் குழந்தையையும், பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் ஜான் ஜெபராஜ் குடும்பத்தினர் அயனாவரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து குழந்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜான் ஜெபராஜ் வில்லிவாக்கம் பகுதியில் தேவியை பார்த்து அவரை பின் தொடர்ந்து பிடிக்க முயன்ற போது தப்பி சென்று விட்டார். இதையடுத்து, ஜான் ஜெபராஜ் முதல்வர் தனி பிரிவில் புகார் அளித்ததையடுத்து அந்த புகாரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலிஸார் தேவியை தேடி வந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை புழல் மதுரா மேட்டுப்பாளையம், லிங்கம் 6ஆவது தெருவில் வசித்து வந்த சுரேஷ் என்பவரது மனைவி தேவியை (43) பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரனை நடத்தினர்.
அதில் தேவி வில்லிவாக்கம் பகுதியில் வசித்த போது ஒரு குழந்தையை கொன்ற வழக்கில் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இருந்த குழந்தை கடத்தப்பட்டது என தெரியாததால் அதனை போலிஸார் தி.நகரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்து உள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு தேவி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது ஜான் ஜெபராஜ் பார்த்ததால் தேவி பற்றி தகவல் கூறியதால் போலிஸாரிடம் சிக்கி உள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் தேவியை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 8 ஆண்டுக்கு பிறகு கடத்தப்பட்ட மகன் மீண்டும் கிடைத்ததை எண்ணி தம்பதியினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மரபணு சோதனைக்கு பிறகு தான் நீதிமன்றம் மூலம் மகனை பெற முடியும் என போலிஸார் தெரிவித்தனர்.