மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாநில அளவில் தொழுநோயை அழிக்கத் தொண்டாற்றி வரும் தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும் கல்லூரியில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு கோலப் போட்டியில் சிறப்பாகக் கோலம் வரைந்த மாணவியர்களுக்குப் பரிசுகளும், தொழுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தின் வாரிசு தாரர்களுக்குத் தையல் பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை சான்றிதழும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின்னர் தொழுநோயால் ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்த நாளை என்னால் மறக்க முடியாது. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடியவர் அன்னை தெரேசா. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வது மிகப் பெரியது. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கி ஆணையிட்டுள்ளார்.
2025-ஆம் ஆண்டில் தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என்பது ஒன்றிய அரசின் இலக்கு. அதற்கு முன்னதாகவே தொழுநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்." என தெரிவித்துள்ளார்.